இலங்கையில் கல்வி மற்றும் தொழிற்சந்தைக்கிடையேயான தொடர்பு

     
          இலங்கையை பொருத்தவரை கல்வி துறையும் தொழில் துறையும் இருவேறு துருவங்களாக வலம்வருதலை காண முடிகிறது. ஏனெனில் இலங்கையில் கல்வியானது தரம் ஒன்று தொடக்கம் பதின்மூன்று வரையும் அதனைத்தொடர்ந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியற் கல்லூரிகள் கல்வி கலாசாலைகள் தொழிற்பயிற்சி நிலையங்கள் என்றவாறு கல்வி நிலைகள் காணப்படுகிறது. இருந்த போதிலும் கல்வி துறைக்கும் தொழிற் துறைக்கும் இடையில் இடைவெளி ஒன்று நிகழ்வதை அவதானிக்கலாம். ஏனெனில் இலங்கையில் ஒரு மாணவன் தனது கல்வியை பூர்த்தி செய்து வெளிவரும் போது அவருடைய வயது சராசரியாக 23-25 வயதை கடந்து விடுகிறது. இதன்போது இவருக்கு செயன்முறை சார்ந்த கல்வியும் வழங்கப்படுவதும் மிக மிக குறைவாகவே காணப்படுகிறது அத்துடன்  வெறும் ஏட்டுக்கல்வியும் மற்றும் மனனம் செய்து ஒப்புவித்தல் போன்ற பரீட்சை மையமான முறையே அதிகமாக கைக்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக வெளிவரும் மாணவன் தான் கற்ற கல்விக்கு ஏற்ற வகையில் தொழிலை பெற்றுக்கொள்ளாமல் வேலையற்றவனாக இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுதான் இன்றைய கல்விக்கும் இலங்கை தொழிற்சந்தைக்கும் இடையிலான நிலையாக காணப்படுகிறது.

      மேலும் சமூகத்தில் காணப்படும் தொழிற்துறைக்கும் கல்விக்கும் இடையில் தொடர்பு அற்ற ஒவ்வாத நிலை இருப்பதை அவதானிக்கலாம். இதன் காரணமாக தொழிற் துறைக்கும்  கல்வி துறைக்கும் முரண்பட்ட நிலை ஏற்படுகிறது. பொருத்தமான கல்வி வழங்கப்பட வில்லையா அல்லது கல்விக்கு ஏற்ற வகையிலான தொழிற்துறை இல்லையா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறான  நிலையில் அதிகமாக கல்வி கற்ற இளைஞர்கள் வேலையற்று இருக்கின்றார்கள். அவர்களுக்கு பொருத்தமான தொழிற்துறையும் குறைவாகவே காணப்படுகிறது. இதனை மெய்ப்பிக்கும் முகமாக 2018 வருட மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின் பிரகாரம் தொழிலின்மை வீதம் 4.4 %  எனக் குறிக்கப்பட்டுள்ளது. மற்றும் கல்வி வீதம் 99.08 % (2016)  ஆகும் இவை இரண்டிக்கும் இடையிலான தொடர்பினைக் கொண்டு நாம் கல்வியின் தாக்கத்தை அறிந்துக் கொள்ளலாம்

2018 ஆண்டறிக்கை
      “குடித்தொகையானது 2017இல் பதிவுசெய்யப்பட்ட 8.208 மில்லியனிலிருந்து 2018இல்             2.4 சதவீதத்தினால் சரிவடைந்து 8.015 மில்லியனை பதிவுசெய்த வேளையில்  தொழிலற்ற குடித்தொகையானது 2018இல் 3.9 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. இதேவேளையில், 2018ஆம் ஆண்டுகாலப்பகுதியில் பொருளாதார செயலாற்றலின்மையில் ஒரு முக்கியமான அதிகரிப்பு அவதானிக்கப்பட்டதுடன் கிராமியத் துறையிலான 8.4 சதவீதப் பொருளாதார ரீதியில் செயற்பாடற்ற குடித்தொகையின் அதிகரிப்பினால் பிரதானமாக ஏற்பட்டது. பொருளாதார ரீதியில் செயற்பாட்டிலுள்ள மற்றும் செயற்பாடற்ற நபர்கள் இரண்டையும் உள்ளடக்குகின்ற வீட்டலகுக் குடித்தொகையானது 2018இல் 2.2 சதவீதத்தினால் விரிவாக்கம் அடைந்திருந்ததுடன் தொழிற்படைப் பங்கேற்பு வீதமானது  2017இல் பதிவு செய்யப்பட்ட 54.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018இல் 51.8 சதவீதத்திற்குக் குறைவடைந்திருந்தது.
2018ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தொழிற்படை பங்கேற்பில் பால் ரீதியான இடைவெளியானது விரிவடைந்திருந்ததுடன், பெண்கள் தொழிற்படைப் பங்கேற்பு வீதம் 2017இல் பதிவுசெய்யப்பட்ட 36.6 சதவீதத்திலிருந்து 33.6 சதவீதத்திற்கு குறைவடைந்திருந்தது. கல்வி மற்றும் நிபுணத்துவத்தினால் தேர்ச்சியடைந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்த போதிலும் தொழிற்படையில் பெண்களின் பங்கேற்பானது இலங்கையில் இன்னும் பின்தங்கிய நிலையே காணப்படுகிறது.”

    இவ்வாறான ஒரு நிலை காணப்பட்ட போதிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தொழிற் துறைக்கு பயிற்றப்பட்டு இணைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அதாவது கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைக்கப்படும் பயிலுனர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படுகின்றனர். இவர்களை போன்றே வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் இக்குறிப்பிட்ட பிரிவினர் மாத்திரமே தான் கற்ற கல்விக்கு ஏற்ற தொழிலை தெரிவு   செய்கின்றனர்.  ஏனைய அனைவரும் தான் கற்ற கல்வியை தவிர வேறு தொழிலை செய்யக்கூடியவர்களாக இருக்கினறனர். 
  இலங்கை கல்வி துறையில் செயற்பாடுகள் சார்ந்த பாடங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது ஆனாலும் அந்த பாடங்களை சரியான முறையில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. உதாரணமாக செயன்முறை தொழிநுட்பம் பாடத்தினை கூறலாம்.
  இவ்வாறான நிலை காணப்பட்ட போதிலும் தற்பொழுது இலங்கை அரசாங்கமானது தொழில் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளமையை கண்டுக்கொள்ளலாம். இதற்கு எடுத்துக்காட்டாக க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியெய்த தவறிய பிரிவினருக்கு என தொழிற்துறையாக பதினமூன்று வருட உத்தரவாதப் படுத்தப்பட்ட பாடசாலை கல்வி அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் கொண்டு செல்கிறது. இருந்த போதிலும் குறிப்பிட்ட மாணவன் தரம் 11 வரை கல்வி கற்றதானது எந்தவித பயனும் அற்ற நிலைக்கு தள்ளப்படுவதுடன் எதிர்கால சந்ததியினரும் தாம் கல்வி கற்காவிடினும் நமக்கு வேலைகள் காத்திருக்கின்றன என்ற நம்பிக்கையில் கல்வியை உதாசினப்படுத்தும் நிலை ஏற்படலாம். தற்பொழுது கொடுக்கப்படும் பதின்மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி கூட பரீட்சையில் சித்தியெய்தாத கல்விகற்க இடர்படுகின்ற தரப்பினருக்கு மாத்திரமே வழங்கப்படுகிறது. இதன்போதும் கல்விக்கும் தொழிலுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகமாகலாம்.
      மேலும் இலங்கையில் தொழிற்துறை மிக்க கல்வியானது தனியார் நிறுவனங்கள் வழங்குகின்ற போதிலும் பயிற்சி அளித்து முடிந்த பின்பு இலங்கையில்  தொழில் செய்வதற்கான வாய்ப்பின்மையால் மாணவர்கள் கற்று வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். உதாரணமாக ஜெர்மன் டெக் நிறுவனத்தை கூறலாம். 
    இவ்வாறாக கல்வி கற்றால் அதற்கான வேலைவாய்ப்பு இல்லை அதேபோல் தொழிற்துறைமிக்க கல்வி கற்றால் தொழிலை செய்வதற்கான வசதி இல்லை. மேலும் இன்று கற்றவருக்கு கூட பொருத்தமான தொழில் கிடைக்காமல் அரசியல் தலையீடுகளால் பொருத்தமற்றவர்களை தொழிலுக்கு தெரிவு செய்யும் முறையும் காணப்படுகிறது. இவ்வாறான ஒரு தன்மையே இலங்கையில் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையில் காணப்படுகிறது.
  இப்படி காலம் காலமாக இலங்கையில் இலவச கல்வி வழங்கப்பட்ட போதிலும் வழங்கப்பட்ட கல்வியின் மூலம் எவ்வித வேலை வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு தீர்வாக பல்வேறு மாற்று வழிமுறைகளை பின்பற்றுவது கட்டாயமானதாகும். அத்துடன் புதிய தொழிற் துறைகளை அறிமுகம் செய்வதும் விரும்பத்தகுந்த விடயமாகும்.
   மற்றும் ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து இலங்கை பொருத்தவரை வேலை உலகிற்கு பொருத்தமான பல விடயங்களை தன்னகத்தே கொண்டுதான் இலங்கை கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கை கல்வி  முறைமையை  வேலையுலகுக்கு திசைமுகப்படுத்தல் இலங்கையின் கல்விக்கொள்கைச் சட்டகமானது கல்வி முறைமையை வேலையுலகிற்குத் திசைமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்துகின்றது NEC (2003) வேலை உலகுக்கான சிறந்த அத்திவாரமாக உயர் தரத்திலான பாடசாலை முறைமையானது பயிற்றப்படக்கூடிய தனிநபர்களை  தொழிற்சந்தைக்கு வழங்குமென்றும் தொழில்நுட்ப, தொழின்மை மற்றும் பல்கலைக்கழக கல்விக்கான தொழிற்சந்தையை வழங்குமென்றும் கொள்கையாக்குவோர் அறிவர். பாடசாலை முறைமையானது அணியாகப் பணியில் ஈடுபடல், தீர்மானம் மேற்கொள்ளல், தொடக்கிவைத்தல், பிரச்சனை தீர்த்தல், பொறுப்பேற்றல், தலைமைத்துவம், தொடர்பாடல் போன்ற திறன்களையும் அறிவையும் உருவாக்குவதிலும் முக்கியமான வகிபங்கினை ஏற்கின்றன. வேலையுலகிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பாடசாலை முறைமை கூட அறிவு மற்றும் தொழிற் சந்தைக்குத் தேவையான குறிப்பான ஆற்றல்களுக்கான சட்டதிட்டத்தினையும் உள்ளடக்குகின்றது
     மேல்கூறப்பட்ட விடயங்கள் காணப்பட்ட போதிலும்  இலங்கையில் கல்வி துறையில் கீழ்வரும் மாற்றங்களை மேற்கொள்ளும் போதே திறம்பட வேலை உலகிற்கான தொழிற்படையை உருவாக்கலாம். வேலை உலகிற்கான கல்விமுறையின் திசைமுகப்படுத்தல்களை மேம்படுத்தும் திட்டங்கள், கலைத்திட்டத்தில் அதன் அபிவிருத்திக்காக முன்னுரிமை, கல்வியில் தொழிநுட்பப் பயன்பாடு, மொழித்திறன்களும் சரளமாக மொழியைப் பயன்படுத்துதலும், தொழில் வழிகாட்டலும் ஆலோசனையும் என்பனவற்றிற்கு முன்னுரிமையளித்தல் வேண்டும்.
    மேலும் இலங்கையின் தொழிற்படையானது வயது முதிர்ந்த தொழிற்படையின் திறன் பின்பற்றல் ஆகியவற்றின் வழிக்காட்டலாக அமையப் பெற வேண்டும். வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்கணிதம் ஆகியவற்றின் முறையான அடித்தளமின்றி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றின் எதிர்கால உயர்மட்ட விரிவாக்கம், குறியீட்டு மற்றும் டிஜிட்டல் திறன்கள் ஆகியன வழங்குதலுடன். தொடர்ச்சியாக மென்திறன்கள் திறனையும் வழங்குதல் வேண்டும்;. பிராந்திய இடைவெளிகளை அடையாளப்படுத்துவதற்கு கல்வி மற்றும் திறனாக்கல் திட்டங்களை வளர்த்தல் வேண்டும்
   மற்றும் இலங்கையில் இன மற்றும் மொழியின் அடிப்படையில் கல்வி மற்றும் திறன்கள் அடைதலில் பல்வேறுபட்ட பிரதேச வேறுபாடுகள் காணப்படுகின்றன. கல்வி மற்றும் திறன் இடைவெளிகளை அடையாளப்படுத்தும் நோக்கில் பிரதேசங்களில் குறிப்பாக பெண்கள் மற்றும் ஏனைய விளிம்பு நிலை குழுக்கள் மத்தியில் இலக்கு வைக்கப்படும் கொள்கை அளவுகோல்கள் அவசியாகவுள்ளன. இதன் மூலம் பொருத்தமான தொழிற்துறையை குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கக் கூடியதாக இருக்கும்.
    ஆங்கில மொழித்திறன் மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவு ஆகியவற்றிலுள்ள பிராந்திய வேறுபாடுகளை சமாளிப்பதற்கு சமூகக் கவனம் தேவையாகவுள்ளது. உள்நாட்டு மொழிகளில் டிஜிட்டல் தளங்களை அணுகல் மற்றும் கணிசமான கிராமப்புற இடைவெளிகளை கருதுகையில் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான முயற்சி தேவையாகவுள்ளது. இதனையொத்ததாக, கிராமப்புற மாவட்டங்களிலுள் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கற்பித்தல் சாதனமாக பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கான தேவை இலங்கைக்கு உள்ளது. கல்வித்துறை முழுவதும் டிஜிட்டல் எழுத்தறிவின் தேசிய மட்ட பின்பற்றல் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக இது அமைதல் வேண்டும். இவ்வாறான நவீன மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையின் கல்வி துறையும் மாற்றம் பெறுமாயின் தொழிற்துறைமிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.இதனூடாக  இலங்கை கல்வித் துறைக்கும் தொழிற்துறைக்கும் இடையில் நிலவும் பாரிய இடைவெளியை இல்லாமல் செய்து ஒரு திறன்மிக்க தொழிற்படையை உருவாக்கலாம்.

Post a Comment

0 Comments