அபிவிருத்தி
அபிவிருத்தி என்பது ஒரு நாட்டில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் போதிய அளவில் வருமானம் கிடைத்தல், அக்குடும்பத்தில் இருந்துவரும் உழைக்கக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் ஒரு ஜீவனோபாய மார்க்கம் அல்லது தொழில் இருந்து வருதல், அக்குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தல், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயன்முறையில் பொதுமக்கள் பங்கேற்று முடிவுகளை மேற்;கொள்வதற்கு வாய்ப்பளித்தல் போன்ற நிலைமைகளுடன் அந்நாடு ஒரு தேசம் என்ற வகையில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான ஆற்றலைக் கொண்டிருந்தால் அந்நிலையை அபிவிருத்தியென கூறலாம்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கல்வியினது பிரதான பண்புகள் யாவை?
அபிவிருத்தியடைந்த நாடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்பவற்றிக்கிடையிலான கல்வியில் பல்வேறு மாறுதல்களை பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அந்தவகையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கல்வியானது எதிர்காலத்தில் அபிவிருத்தியடையும் நோக்கில் பொருளாதாரத்தை நோக்காக கொண்டே கல்வி வழங்கப்படுவதை காணலாம். உதாரணமாக இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட பதின்மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட பாடசாலை கல்வியின் நோக்கமானது மாணவர்களை தொழிற்சந்தைக்கு தயார்ப்படுத்துவதாக அமைகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையே மையமாக கொண்ட கல்வியை காணக்கூடியதாக இருக்கிறது.
மேலும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் செயன்முறை சார்ந்த கல்வி குறைவாக காணப்படுவதை நோக்கலாம். இந்நாடுகள் அதிகமாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் அக்கல்வியானது ஏட்டுக்கல்வியை அடிப்படையாக கொண்டே காணப்படுகிறது. இதன்போது மாணவர்கள் 6 வயது முதல் 23 அல்லது 24 வயது வரை அவர்கள் வெறும் ஏட்டுக்கல்வியை மாத்திரமே துணையாக கொண்டு கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கு செயன்முறை மிக்க கல்வி வழங்கும் முறை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இதற்கு மாறுப்பட்ட தன்மையினை நாம் ஜப்பான் நாட்டில் காணக்கூடியதாக இருப்பதும் எடுத்துக் கூறக்கூடியதாகும்.
மேலும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில்; ஆண் பெண் இருபாலாருக்குமே சமமான கல்வியை வழங்குவதை அடிப்படையாக கொண்டிருப்பதை காணலாம். இம்முறை அபிவிருத்தியடைந்த நாடுகளை விடவும் அதிகமாகவே காணப்படுகிறது. இம்முறையை பொருத்தவரை இலங்கை பங்களாதேஷ மாலைத்தீவு போன்ற நாடுகளின் காணப்படும் கல்வி முறையை உதாரணமாக கூறலாம்.
மேலும் இந்நாடுகளில் அதிகமாக தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் வழங்குதலையும் அவதானிக்கலாம். அனேகமான அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தனது தாய் மொழிக்கல்வியை வழங்குவதை கட்டாயமாக கொண்டுள்ளதை காணலாம். எடுத்துக்காட்டாக இலங்கை, இந்தியா,சீனா, ஜப்பான், பாகிஸ்தான் போன்ற நாடுகளை கூறலாம். ஆரம்பக்கல்வியில் தாய்மொழி பிரதான இடத்தைப் பெற்றுக் காணப்படுவதுடன் சில நாடுகளில் உயர்கல்வியை விரும்பிய மொழியில் கற்கும் வாய்ப்பும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நாடுகளில் விவசாய துறை சார்ந்த கல்வி முறை அதிகமாக காணப்படுகிறதை காணலாம். உதாரணமாக இந்தியாவை கூறலாம். அத்துடன் அபிவிருத்தியடைந்த வரும் நாடுகளில் போதனை முறை கல்வியும் இடம்பெறுகிறது. உதாரணமாக இன்றைய காலக்கட்டத்தில் இலங்கையில் அறநெறி வகுப்புக்கள் மற்றும் தாஹம் பாசல போன்ற வகுப்புக்கள் இடம்பெறுகிறது. இவ்வாறாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் கல்விப் பண்புகளை குறிப்பிடலாம்
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்