பண்பாடு/கலாசாரம் - what is Culture?


பண்பாடு- கலாசாரம் -அறிமுகம்
பண்பாடு/கலாசாரம் -அறிமுகம் 

பண்பாடு அல்லது கலாசாரம் என்பது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மையையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது. பண்பாடு என்பதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவுப் பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூகக் கட்டமைப்பு என்பவற்றைச் சுட்டி நிற்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டிற்குள் அடங்கும். பொதுவாக இது மனித நடவடிக்கைகளைக் குறிக்கின்றது எனலாம்.  

1952 இல் எல். குறோபெர் என்பவரும், கிளைட் குளுஹோன் என்பவரும் இணைந்து எழுதிய “பண்பாடு பற்றிய எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும் ஒரு விமர்சன மீள்பார்வை” எ(Culture: A Critical Review of Concepts and Definitions)  200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைப் பட்டியலிட்டுள்ளனர். 18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளில் மேலைத்தேய அறிஞர்கள் சிலர் பண்பாடு என்பதை நாகரீகம் என்பதோடு அடையாளம் கண்டு அதை இயற்கைக்கு எதிரான ஒன்றாகக் கருதினார்கள். உயர் பண்பாட்டைக் குறைவாகக் கொண்டுள்ளவர்கள் கூடுதல் இயல்பானவர்களாக கருதப்பட்டனர். அத்துடன் உயர் பண்பாட்டின் சில அம்சங்கள் மனித இயல்பை அழுத்தி வைப்பதாகவும் சிலரால் விமர்சிக்கப்பட்டது.  

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மானிடவியலாளர்கள் பல்வேறு சமூகங்களுக்கும் பயன்படத்தக்க வகையிலான பண்பாடு என்பதன் பரந்த வரைவிலக்கணம் ஒன்றின் தேவையை உணர்ந்தார்கள். படிமலர்ச்சிக் கோட்பாட்டைக் கவனத்திற்கு எடுத்துககொண்ட பிரான்ஸ் போவாஸ் முதலிய மானிடவியலாளர்கள் மனிதர் எல்லோரும் சமமாகவே படிமலர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் எல்லா மனிதரும் பண்பாட்டைக் கொண்டிருப்பதால் அது மனிதனின் படிமலர்ச்சியின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதினர். பண்பாடு என்பது மனித இயல்பு எனவும், அது அனுபவங்களை பகுத்துக் குறியீடாக்கி குறியீட்டு முறையில் வெளிப்படுத்தவதற்கான மனிதருடைய தகுதியை மூலவேராகக் கொண்டது எனவும் அவர்கள் வாதித்தார்கள். அதன் விளைவாக ஒன்றிலிருந்து ஒன்று விலகி வாழ்கின்ற மக்கள் குழுக்கள், தங்களுக்கெனத் தனித்துவமான பண்பாடுகளை உருவாக்கிக் கொள்கின்றன. எனினும் வெவேறு பண்பாடுகளின் அம்சங்கள் ஒரு குழுவிலிருந்து இன்னொன்றுக்கு இலகுவாகப் பரவமுடியும். எனவே வழிமுறை நோக்கிலும், கோட்பாட்டுக் கோணத்திலும் பயனுள்ள வரைவிலக்கணங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை மானிடவியலாளர்களுக்கு ஏற்பட்டது. அவர்கள் பொருள் சார் பண்பாடு என்பதற்கும், குறியீடுசார் பண்பாடு என்பதற்குமிடையே வேறுபாடுகளைக் கண்டார்கள். இவையிரண்டும் வெவ்வேறு வகையான மனிதச் செயற்பாடுகளை வெளிப்படுத்துவது மட்டுமன்றி இரண்டும் வெவ்வேறு வகையான வழிமுறைகள் தேவைப்படும் தரவுகளையும் உள்ளடக்கியுள்ள காரணத்தினால் இந்த பகுப்பாய்வு தேவையாக இருந்தது.

பண்பாடு என்பதை விளங்கிக் கொள்ளும் இன்னொரு பொதுவான முறை மூன்று மூலங்களை உள்ளடக்கியுள்ளது.

1. பெறுமானம் (எண்ணங்கள்)

2. நெறிமுறைகள் (நடத்தை)

3. பொருட்கள் (பொருள்சார் பண்பாடு)

வாழ்வில் முக்கியமானது எது என்பது பற்றிய எண்ணங்களே ‘பெறுமானம்’ ஆகும். அவை பண்பாட்டின் ஏனைய அம்சங்களை வழிநடாத்துகின்றன. நெறிமுறைகள் என்பன வெவ்வேறு நேரங்களில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகும். ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவும் இந்தப் பொதுவழக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளது. சமூகம் நடைமுறைப்படுத்தும் இந்த நெறிமுறைகள் சட்டங்கள் என பொதுவாக வழங்கப்படுகின்றன. மூன்றாவது அம்சமான பொருள்கள் பண்பாட்டின் பெறுமானங்கள்மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றது.

19ஆம் நூற்றாண்டில் மானிடவியலாளர் எட்வாட் டெயிலர் என்பவர் பண்பாடானது இசை, இலக்கியம், வாழ்க்கை முறை, உணவு, ஓவியம், சிற்பம், நாடகம், திரைப்படம் போன்ற மனிதருடைய கலைப் பொருட்களிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுகின்றது. சில அறிஞர்கள் பண்பாட்டை நுகர்வு, நுகர் பொருட்கள் என்பவற்றின் அடிப்படையில் அடையாளம் காண்கின்றனர். ஆனால் மானிடவியலாளர் பண்பாடு என்பது நுகர்பொருட்களை மட்டுமல்லாது அவற்றை உருவாக்குவனவும், அவற்றிற்கு பொருள் கொடுப்பனவுமான வழிமுறைகளும் சமூகத்தொடர்புகள், செயல்முறைகள் என்பவற்றையும் குறிப்பதாகக் கூறுகின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை பண்பாடு என்பது கலை, அறிவியல், நெறிமுறைகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. குறிப்பிட்ட சமூகத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்களின் கூட்டு மொத்த திரட்டலாக பண்பாடு அமைகின்றது. அதனை அடியொற்றியே மனித நடத்தைகள் நெறிப்படுத்தப்படுகின்றன. பண்பாட்டு விசைகளோடு இசைவு பெறாத நிலை ஒருவரின் உளச் சமநிலையிலே தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. சமூக வாழ்வின் பொருண்மியத் தளத்தின் மீது பண்பாடு மனிதரால் உருவாக்கம் பெறுகின்றது. பண்பாட்டை குறிப்பிட்ட சமூகக் குழுவின் வாழ்க்கை முறைமை என்றும் குறிப்பிடலாம். அது மரபணுக்கள் வழியாக கையளிக்கப்படுவதில்லை. கற்றலின் வழியாகவே முன்னெடுக்கப்படுகின்றது. அது கற்றுக் கொள்ளப்படுகின்றது. அதன் வழி இசைந்து செல்ல முடியாதவிடத்து ஒருவரின் உளச் சமநிலையிலே தாக்கங்கள் ஏற்படும். மெதிவ் ஆர்னல் குறிப்பிடுவது போன்று „உயர்ந்ததெனக் கருதும் எல்லாவற்றையும் பண்பாடெனக் கொள்ளலாம்”. பீ.எச். பென்டொக் பண்பாடென்பதை இரண்டு அர்த்தமுள்ளதாக விளக்கியுள்ளார். அவரது கருத்துப்படி மானிடவியலாளர் அச்சொல்லை மானிடவியலாளர்கள் அகிலத்து வாழ்க்கைக் கோலமெனக் குறிப்பிடுவர். 

அக்கருத்துப்படி மனிதர்கள் ஒத்து வாழ்தல் மட்டுமன்றி அவர்கள் வேறுபட்டு நிற்கும் தன்மையும் சமூக வாழ்வின் பல்வேறு பழக்கவழக்கங்கள், விழாக்கள், கட்டுப்பாடுகள் என்பனவும் அகிலத்து வாழ்க்கைக் கோலத்தினுள் அடங்கும். எனவே அது தெரிவு செய்யப்பட்ட முக்கியமான கூறுகளை மாத்திரம் உள்ளடக்காது மனிதனால் கையாளப்படும் சகல பண்பாட்டுச் செயற்பாடுகளையும் குறிப்பதாய் அமையும்.

பென்டொக் முன்வைத்த இரண்டாவது கருத்துப்படி “தெரிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தவற்றை பண்பாடெனக் கருதலாம்”. அதன் அடிப்படையில் மனிதன் உயர்ந்த நாகரீகச் சிறப்பை விருத்தி செய்து கொண்டு வருகையில் உருவாக்கிக் கொண்ட சிந்தனைகள், கருத்துக்கள், நம்பிக்கைகள், மனிதனது படைப்பாற்றலால் உருவான மொழி, இலக்கியம், கலைகள் முதலான அம்சங்களையும் பண்பாடெனக் கருதலாம். மனிதனது சிந்தனை உயர் இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து ஆழமடைந்ததன் விளைவாக உருவான இவ் ஆக்கங்கள் யாவும் மனப்பாங்குகளும், நடத்தைக் கோலங்களும் ஒழுங்கமைவதில் விசேடமாக பாதிப்பை உண்டு பண்ணுபவை எனக் கருத முடியும். அவ்வாறெனில் பண்பாடெனப்படுவதன் கருத்து மனிதன் மிக உன்னதமானதாகக் கருதும் விழுமியங்கள் பலவும் அடங்கிய செயற்பாடுகள் எனக் கூறுவதில் எவ்வித தவறும் இல்லை எனலாம்.

பென்டொக் முன்வைத்த இரு வகையான கருத்துக்களிலிருந்து பண்பாட்டை பொதுப்பண்பாடு, தனிப் பண்பாடு என இரு பிரிவுகளாக நோக்கலாம். பொதுப்பண்பாடு என்பது மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான அகிலப்பண்பு கொண்டது. குறித்த சமூகத்திற்கு மட்டுமே உரித்தான இயல்புகளைக் கொண்டது தனிப் பண்பாடாகும்.

Post a Comment

0 Comments