முதிர்ச்சி - கற்றல்



முதிர்ச்சி என்பது அடிப்படையில் மரபியல் ரீதியான நிகழ்ச்சித் திட்டத்தின் படி நடத்தையில் ஏற்படுகின்ற மாற்றங்களின்    செயற்பாடாகும்.. அதாவது குறிப்பிட்ட பிள்ளை ஒரு விடயத்தை செய்வதற்கு தேவையான உள்ளுறுப்புக்கள் வெளியுறுப்புக்கள் என்பனவற்றின் வளர்ச்சி நிலையே ஆகும். உதாரணமாக பேசுவதற்கு பிள்ளையிடம் அதற்கான உறுப்பக்கள் முதிர்ச்சி அடைந்திருந்தால் மாத்திரமே பிள்ளையால் பேச முடியும்.



      வயது செல்லச்செல்ல மனித உயிர்களிடத்தில் பதிய பண்புகள் தோன்றுவதற்கும் பதிய தொழிற்பாடுகள் ஏற்படுவதற்கும் இது காரணமாகின்றது. குழந்தைகளின் நரம்புத் தொகுதியிலும் தசைகளிலும்  நிகழும் வளர்ச்சிக்கு ஏற்ப குழந்தை நடக்கும் திறனைப் பெற்றுக் கொள்கிறது. அதேபோன்று உணவு சமிபாடடைவதற்கு சமிபாடடையச்   செய்யும் உடல் உறுப்புக்கள்  முதிர்வு அடையும்போது திண்ம ஆகாரங்களைச் உண்ணும்  சக்தியைப் பிள்ளை பெற்றுக்கொள்கிறது. நடப்பதற்கான திறன்களை பெற்றுக்கொள்ளல் திண்ம ஆகாரங்கள் சீரணிக்கும் சக்தியைப் பெற்றுக்கொள்ளல் போன்ற புதிய இயல்புகளுக்கும் புதிய செயற்பாடுகளுக்கும் காரணமாக அமைவது முதிர்ச்சியாகும். இந்த முதிர்ச்சிக்கும் கற்றலுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பினை நாம் ஆய்வுகளினூடாக அறியலாம்.  


      கற்றலில் தாக்கம் விளைவிக்கும் பிரதான காரணிகளான முதிர்ச்சிக்கும் கற்றலுக்குமிடையில் பலமான தொடர்பு காணப்படுகிறது. மனிதனின் உள்ளுறுப்புக்களில் வளர்ச்சியினால் ஏற்படும் செயல்களை முதிரச்சி எனவும் புறச் சூழலினால் பெற்றுக்கொள்ளப்படும் நடத்தை மாற்றங்களை கற்றல் எனவும் விளக்கலாம். ஒரு பிள்ளை எதாவது ஒன்றை கற்றுக்கொள்வதற்காக  அது தொடர்பான கட்டமைப்பு ரிதீயான முதிர்ச்சிநிலை அடைந்திருத்தல் அவசியமாகும். அதாவது முதலாம் தரம் கற்கும் பிள்ளையிடம் ஒன்று தொடக்கம் 100  வரையான எண்களை கற்பிக்கும் போது அதனை பிள்ளையால் விளங்கி கொள்ள முடிவதில்லை ஏனெனில் அதற்கான உள்ளுறுப்புக்களின் வளர்ச்சி தன்மை போதாமையே ஆகும். ஆகவே தான் கற்றலுக்கு முதிர்ச்சி இன்றிமையாததாகும் அத்துடன் குறிப்பிட்ட முதிர்ச்சியில் வழங்கப்பட வேண்டிய  பயிற்சி வழங்கப்படவில்லையாயின் அப்பிள்ளையின் விருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவேதான் ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து ஒரு குறிப்பிட்ட முதிர்ச்சியை அடைந்த பிள்ளைக்கு தேவையான கற்றலை வழங்குதலும் கற்றல் நிகழ வேண்டுமாயின் அப்பிள்ளையிடம் தேவையான முதிர்ச்சி (ஆயத்தநிலை) காணப்படுதலும் முக்கியமாகும்.

      குழந்தை பருவத்தின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் முதிர்ச்சியே அதிகம் செல்வாக்குச் செலத்துகின்றது. அப்பருவத்திலையே எந்தவித பயிற்சிகளும் செயற்பாடுகளும் இன்றி புதிய இயல்புகளும் புதிய செயற்பாடுகளும் தோன்றுகின்றன. பற்கள் முளைப்பதற்கும் உடலின் அங்க அசைவுகளை  செய்வதற்கும் கற்றல் அவசியமில்லை. நடப்பதற்கு பிள்ளைக்கு குறைந்தளவு கற்றலே தேவைப்படுகிறது. கத்தரி கொண்டு வெட்டுதல் எழுதுதல் வாசித்தல் ஆகியவற்றிற்கு கற்றலின் பங்களிப்பு முக்கியமானதாகும். எனினும் இத்திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு அது தொடர்பான முதிர்ச்சி நிலையை  அடைந்திருத்தல் அவசியமாகும். பிள்ளைப்பருவத்திலிருந்து விருத்தி அடைந்து செல்லும் போது முதிர்ச்சியை விடவும் கற்றலே அதிகம் முக்கியம் பெறுகின்றது.

       உளவியல் அறிஞரான மெக்கிறோ (1943) என்பவர் ஒரு சோடி இரட்டைப் பிள்ளைகளை கொண்டு தவழுதல், நடத்தல், வழுக்கி விளையாடுதல் போன்ற பல செயல்களில் திறன்கள் பெற்றுக்கொள்ளும் விதத்தைப் பரிசோதித்தார். ஒரு பிள்ளைக்கு ஆரம்பம் தொடக்கம் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் மற்ற பிள்ளைக்கு எந்தவித பயிற்சிகளும் வழங்கப்படவில்லை. ஆரம்பத்தில் பயிற்சி பெற்ற பிள்ளை மற்ற பிளளைகளை பார்க்கவும் திறமையாக ஏறுதல், நீந்துதல், வழுக்கி விளையாடுதல் போன்ற செயல்களை திறமையாக செயற்பட்டாலும் காலம் கடந்து பயிற்சி பெற்ற பிள்ளையும் இலகுவாகவும் விரைவாகவும் கற்றுக்கொண்டது. இந்த பரிசோதனையின் மூலம் முதிர்ச்சியின் முக்கியத்துவமும் முதிர்ச்சியின் பின் பெற்றுக்கொள்ளும் பயிற்சியின்  விளைவுகள் எத்தகையன என்பன பற்றியும் தெளிவாக எடுத்துகாட்டுகிறது. எனவே இலகுவான உடற்செயல்களை விருத்தியடையச் செய்வதற்கு பொருத்தமான வயதடையும் வரை பயிற்சியை ஒத்திப்போடுதல் மிகவும் திருப்தியான விளைவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு வாயப்பளிக்கும் என்பதை உளவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

   ஊக்கலின் விளைவாக முதிர்ச்சியடையும் காலத்தில் விரைவாகவும் சரியாகவும் கற்றுக்கொள்ள முடியும். முதிர்ச்சி அடைவதற்கு முன் வழங்கப்படும் நீண்டகால பயிற்சியும் முதிர்ச்சி அடைந்ததன் பின் வழங்கப்படும் சொற்பமான பயிற்சியும் பெரும்பாலும் சமமான விளைவுகளையே பெற்றுத்தருகின்றன. பிள்ளைகளிடம் காணப்படும் முதிர்ச்சியின் இயல்பு காரணமாக அவர்களுக்குரிய வயது வரும்வரை சில திறன்களை பயிற்றுவிக்க முடியாது. சாதாரணமாக சற்று வசதிபடைத்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பொருத்தமான வயதடையும் முன் மலசலம் கழிப்பதற்கு பயிற்சியை வழங்க முற்படுவர். எனினும் இத்தகைய பயிற்சியை வழங்குவதற்கு  மேற்கொள்ளும் முயற்சி  பிள்ளையின்  ஆளுமை வளர்ச்சிக்குத் தீங்கு ஏற்படுத்தவும் கூடும். இத்தகைய பயிற்சிகளை உடல் ரீதியாக பிள்ளை பொருத்தமான முதிர்ச்சியை  அடைந்ததன் பின்பே வழங்க வேண்டும்.

   முதிர்ச்சி பற்றிய பரிசோதனைகளினூடாக மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்களை மெக்கிறோ (1943) என்பவர் சமர்ப்பித்துள்ளார். அவரின் கொள்கைப்படி  குழந்தைப் பருவத்தில் முதிர்ச்சி மிகவும் முக்கியத்தவம் வாய்ந்தது. குழந்தைப்பருவத்தில் பிள்ளையின் விருத்தியை பற்றி சிந்திக்கும்போது முதிர்ச்சி பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார். உட்கார்தல், எழுந்து நிற்றல், ஏறுதல், நடத்தல்  போன்ற இலகுவான உடற்செயற்பாடுகள் இத்தகைய நடத்தை விருத்தியைச் சார்ந்தவை. இலகுவான உடற் செயற்பாடுகளை கற்றுக்கொள்ளும் போது  முதிர்ச்சி முக்கியமானதாக இருந்தாலும் நீந்துதல், சைக்கில் மிதித்தல் போன்ற சிக்கல் நிறைந்த திறன்களை கற்பதற்குப் பயிற்சியும் அனுபவங்களும் மிகவும் முக்கியம் வாய்நதன என மெக்கிறோ என்பவர் குறிப்பிடுகிறார்.

     சில நேரங்களில் குறிப்பிட்ட பிள்ளைக்கு  சில அனுபவங்கள் தொடர்பாக அறிவையோ   அல்லது பயிற்சியையோ பெற்றுக்கொள்வதற்குப் பொருத்தமான வயதை அடையாவிட்டாலும் அவன் வேறொரு செயற்பாட்டினை கற்பதற்கு அவசியமான முதிர்ச்சியை பெற்றிருக்கக்கூடும்.. பிள்ளை விருத்திப் பற்றிய சில கற்கைகள் இதனைச் சுட்டிக்காட்டுகிறது. சில பிள்ளைகள் சிறிய  சைக்கிள் வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்வதற்கு அதிக காலம் எடுத்தாலும் ஓடுதல் பாய்தல் இலகுவான செயற்பாடுகளைக் கற்றுக்கொள்ள அவ்வளவு காலம் எடுக்கமாட்டார்கள். ஆதலால் முதிர்ச்சி என்னும் எண்ணக்கருவுக்கு அவசியமற்ற முக்கியத்துவத்தை வழங்கிச் சகல செயல்களையும் அதற்குப் பொருத்தமான வயது வரும் வரை ஒத்திப்போடுதல் அவ்வளவு பயனுடையதாக அமைவதில்லை


ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து பிள்ளையின் முதிர்ச்சி என்பது ஒரு விடயத்தை செய்வதற்கு குறிப்பிட்ட பிள்ளை ஆயத்த நிலையை அடைதலையே ஆகும். அதாவது உதாரணமாக உணவு உண்ணுவதற்கும் அந்த உணவு சமிபாடடையவும் அதற்கான அங்க அசைவுகள் முதிர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என்பதே ஆகும். இதனடிப்படையிலையே பிள்ளைகளின் முதிர்ச்சியை கவனத்தில் கொண்டு அதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும் மற்றும் முக்கியமான சில விடயங்களுக்கு முதிர்ச்சி அடையும் வரை காத்திருப்பதும் பயனற்ற செயலாகும். எனவே தான் பிள்ளையின் அன்றைய நிலைமையை அல்லது முதிர்ச்சியை கருத்திற் கொண்டு பொருத்தமான செயற்பாடுகளை வடிவமைப்பது சாதகமான விளைவுகளை தரக்கூடியதாக இருக்கும்.

ஆக்கம் 
R..திஸ்ணாராஜா 
BA,PGDE, DIP in TAmil,

Post a Comment

0 Comments