கல்வி உளவியலும் ஆசிரியரும்

கல்வி- உளவியலும்- ஆசிரியரும்
www.Asiriyam.com

 1.1. கல்வி உளவியலும் ஆசிரியரும்

கல்வி உளவியலானது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகும். அண்மையகாலத்தில் இத்துறையில் நிகழ்ந்து வரும் முன்னேற்றங்கள் கல்வியின் ஆன்மா என்ற எமது விளக்கத்தை மாற்றி, வகுப்பறையில் கற்பித்தல்-கற்றல் செயல்முறைக்கு புதியதொரு அர்த்தத்தை அளித்துள்ளன. அதன்படி, இது ஆசிரியர் கல்வித் திட்டங்களின் ஒன்றிணைந்த ஒரு பகுதியாகவும், முகிழ்நிலை ஆசிரியர்கள் (Prospective teachers) மற்றும் பயிற்சி ஆசிரியர்களின் வாண்மைத்துவப் பயிற்சிகளின் முக்கிய பகுதியாகவும் மாறியுள்ளது. அந்த வகையில் கல்வி உளவியல் என்பது ஆசிரியர்களின் சுவாசமாக மாறியுள்ளதுடன் கற்பித்தலின் இருதயமாகவும் இடம்பிடித்துள்ளது.

1.2 கற்பித்தல் - கற்றல் செயன்முறையில் ஆசிரியரின் வகிபங்குகள்

கற்பித்தல்-கற்றல் செயன்முறையானது ஆசிரியர், கற்பவர்,பாடவிதானம் சூழல் ஆகிய பிரதான நான்கு கூறுகளை உள்ளடக்கியுள்ளது. ஆசிரியர் ஒரு பயிற்றுனராக வகித்து வந்த முதன்மையான வகிபங்கு கடந்த பல ஆண்டுகளில் வசதிப்படுத்துபவர் என்ற நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளதுடன் அதன் காரணமாக ஆசிரியரின் மொத்த ஆளுமையிலும், அதேபோல் வகுப்பறையில் பிரயோகிக்கும் அணுகுமுறைகளிலும், முறைகள், நுட்பங்கள், உள்ளடக்கம் மற்றும் சூழலிலும் கணிசமான மாற்றம் தேவைப்படுகிறது. கற்பவர்களை நோக்கும்பொழுது செயலூக்கமற்ற மற்றும் இணக்கமான கற்பவர் என்ற நிலையிலிருந்து செயலூக்கத்துடனும், தன்னாட்சியுடனும் மற்றும் விருப்போடும் கற்கக் கூடிய வகையில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

                                        கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

1.3 கல்வி உளவியலும் மாறிவரும் ஆசிரியர் வகிபங்கும்

கல்வி உளவியலானது ஒப்பீட்டளவில் மிக காலத்தால் அண்மிய, அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ள ஒரு கிளைத்துறையாகும். புகழ்பெற்ற தத்துவஞானியான ஜோன் ஹேபர்ட் (John Herbart) கல்வி உளவியலின் “தந்தை” எனக் கருதப்படுகிறார். கல்வி உளவியல் பற்றிய முதலாவது நுாலாகக் கருதப்படுவது, வில்லியம் ஜேம்ஸ் என்பவரால் எழுதப்பட்ட 'உளவியல் குறித்து ஆசிரியர்களுக்கான உரை’ (Talk to Teachers on Psychology) என்பதாகும். பல்வேறுபட்ட கோட்பாட்டுப் புலங்களின் விருத்தி மற்றும் தத்துவார்த்த அடிப்படைகள் என்பன கல்வி உளவியல் துறையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை உருவாக்கியுள்ளன.

ஆரம்ப நாட்களில், மரபுகள் மற்றும் மரபுத் திறன்கள் குறிப்பாக கிரகித்தல், ஞாபகம், நினைவுபடுத்தல் போன்றவற்றை இளம்பராயத்தினருக்கு கையளித்தலே கற்பித்தல் என விளக்கப்பட்டது. ஆசிரியர் பாடவிடயத்தில் பூரணத்துவம்மிக்கவராக இருந்து அவற்றை ஆசிரியர்மைய முறையைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. மாணவர்கள் அவற்றை உள்வாங்குவதற்கும், அவற்றை பொருத்தமான சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்கும் நெட்டுருப் பயிற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், முன்னைய நாட்களில் ஒரு முன்மாதிரியாகவும், ஒரு சமூகத் தலைவராகவும் ஆசிரியர் ஆற்றிய பங்கை நாம் தரக்குறைவாக கருதிவிடக் கூடாது. அவர்கள் மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூகத்தோடு மிகுந்த நெருக்கமானவர்களாக இருந்துள்ளனர். அத்தோடு அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதிலும் முக்கிய பங்கு வகித்தனர்.

தென்னிந்திய இலக்கிய வரலாறு - Click Here

இன்று கற்பவரை செயலார்வத்துடன் கற்றலில் ஈடுபடுத்துவதற்கு ஒரு பரந்த மற்றும் சிக்கல்வாய்ந்த பொறுப்பு ஆசிரியரின் வகிபாகத்தில் பொதிந்திருக்கின்றது. ஆசிரியர் வகிபாகத்தின் இந்த வியத்தகு மாற்றமானது வசதியளிப்பவராக ஆசிரியர் ஒருவர் முற்றிலும் வேறுபட்ட பல திறன் தொகுதிகளைக் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதைக் குறித்து நிற்கின்றது (Brownstein, 2001). ஒரு ஆசிரியர் பேசுகின்றார், ஒரு வசதியளிப்பவர் கேட்கிறார் ஒரு ஆசிரியர் முன்னால் இருந்து விரிவுரை செய்கிறார், ஒரு வசதியளிப்பவர் பின்னால் இருந்து உதவுகின்றார், ஒரு ஆசிரியர் ஒரு தொகுதி பாடத்திட்டத்தின்படி பதில்களை அளிக்கிறார், ஒரு வசதியளிப்பவர் கற்பவருக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, கற்பவர்கள் தமது சொந்த முடிவுகளுக்கு வருவதற்கான சூழலை உருவாக்கிக்கொள்கிறார் ஒரு ஆசிரியர் பெரிதும் நீண்ட உரையை வழங்குகிறார், ஒரு வசதியளிப்பவர் கற்பவர்களுடன் தொடர்ச்சியாக உரையாடுபவராக இருக்கிறார் (Rhodes & Bellamy, 1999).

        எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here

ஆசிரியரின் வகிபாகத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கான காரணங்களாக Seifert and Sutton (2011) ஆகியோர் குறிப்பிட்டவை வருமாறு,

(1) அதிகரித்த பன்முகத்தன்மை :

பன்முகத்தன்மை கற்பித்தலை ஒரு நிறைவான தொழிலாக மாற்றியுள்ள போதிலும் சில விடயங்களில் மிகவும் சவால் மிகுந்ததாகவே விளங்குகிறது. மாணவர்களிடையே உள்ள பன்முகத்தன்மையைத் தவிர ஆசிரியர்கள் பாடத்திட்டம், கற்றல் சூழல், முறைகள் மற்றும் உத்திகள், கணிப்பீடு போன்றவற்றிலான பன்முகத்தன்மை தொடர்பிலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

(2)அதிகரித்த கற்பித்தல் தொழில்நுட்பம்:

தொழில்நுட்பமானது மாணவர்கள் கற்பதற்கும், ஆசிரியர்கள் கற்பிப்பதற்குமான புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளது. மேலும், தொழில்நுட்பம் காரணமாக மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் நடத்தைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் கல்வி உளவியலின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கு காரணமாக இருக்கலாம்.

(3) கல்வியில் அதிக பொறுப்புக்கூறல்:

கற்றல் மற்றும் நல்ல தரமான கற்பித்தல் என்பவற்றை எவ்வாறு கணிப்பிடுவது (அல்லது சான்றாதாரங்களை வழங்குவது) என்பதில் கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போது பொதுமக்களும், கல்வியியலாளர்களும் அதிக கவனத்தைச் செலுத்துகின்றனர்.

(4) ஆசிரியர்களின் அதிகரித்த தொழில்வாண்மை

ஆசிரியர்கள் தங்கள் தொழில்வாண்மைத் திறன்களை விருத்திசெய்வதற்கான வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்கும் தங்களின் சொந்த வேலையினதும், சக உத்தியோகத்தர்களினதும் வேலையினதும் தரத்தைக் கணிப்பிடுவதற்கான வழிமுறைகளை பிரயோகிப்பதற்கும் மற்றும் தேவைப்படும் போது அதை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் முடிகிறது.

கற்றல்-கற்பித்தல் செயன்முறை தொடர்பாக, ஆசிரியரின் வகிபங்கு தெளிவாகப் பிரிக்க முடியாத மூன்று பரப்புக்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன ( Kotalawala, 1996, p.13). .அவையாவன:

1. கற்றல் குறிக்கோள்களை வரையறுத்தல்

பாடப்பொருள், மாணவர்கள் மற்றும் கற்றல் சூழல் போன்றவற்றின் தன்மை போன்றவற்றுடன் தொடர்புபட்ட வகையில்.

தொகுதி (01): கல்வி உளவியல்

2. கற்றல் அனுபவங்களை ஒழுங்கமைத்தல்

வயது, விருப்பங்கள், தேவைகள், ஆற்றல் மட்டம், கற்றல் பாங்குகள், மாணவர்களின் திறன்கள், தொழில்சார் திறன்கள் மற்றும் கற்றல் வளங்கள் போன்றவற்றிற்கு ஏற்ப.

3. கற்றல் பேறுகளின் மதிப்பீடு உள்ளடக்கம் மற்றும் குறிக்கோள்கள், மாணவர் நிலை மற்றும் சூழ்நிலைகளுக்குப் பொருத்தமானதா.

21 ஆம் நூற்றாண்டில் ஆசிரியர்களின் வகிபங்கு

21 ஆம் நூற்றாண்டின் கல்விமுறை ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பின் ஊடாக பெரிதும் மாற்றங்கண்டுள்ளது. எமது ஆசிரியர்களும் மாணவர்களும் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், திரைப்படங்கள், காணொளி விளையாட்டுக்கள் (Video games) மற்றும் பிற தொழில்நுட்பங்களின் ஊடாகக் கிடைக்கும் தகவல்களில் மூழ்கியுள்ளனர். மிகவும் உயர்ந்தளவுக்கு தொழில்நுட்ப மற்றும் உலகமயமாக்கப்பட்ட சமுதாயத்தில் பிள்ளைகள் வித்தியாசமான முறைகளில் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களின் கற்றலுக்கு பலவகையான அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. ஆசிரியர்கள் அறிவை வழங்குபவர்களாக தொடர்ந்தும் இருக்கமுடியாது. மறுபுறத்தில் தொழிற் சந்தையில் பொதுவாக அதிகளவு திறன்கள் மற்றும் மென்திறன்களுக்கான தேவை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, தற்போதைய காலத்தின் கல்வியானது வாழ்க்கை மற்றும் தொழில் திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நெட்டுருக்கற்றலுக்கு எந்தவிதமான மதிப்பும் கிடையாது. சமூகத்தில் மேலெழுந்து வரும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஆசிரியர்கள் தங்களை நன்கு தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தவகையில், ஆசிரியர்களிடத்தில் கணிசமான வகிபங்கு மாற்றத்தை வேண்டி நிற்கும் கட்டுருவாக்க அணுகுமுறையொன்றே கற்பித்தல்-கற்றல் செயன்முறையில் வேண்டப்படுகின்றது.

21 ஆம் நூற்றாண்டின் ஆசிரியர் ஒருவர் கட்டாயமாக எண்மின்னியல் ஆசிரியராக (Digital teacher) இருக்க வேண்டும். தொழில்நுட்பம்சார் கற்பித்தலியல் அறிவையும் திறனையும் கொண்டிருக்கும் ஆசிரியரையே எண்மின்னியல் ஆசிரியர் என வரையறுத்துக் கொள்ளலாம். வேலைவாய்ப்புத் திறன்களை அதிகரித்தல், அவை தொடர்பான திறன்களை மாணவர்களுக்கு வழங்குதல், அது தொடர்பான அறிவை விரிவடையச் செய்தல், எண்மின்னியல் சமூகத்தில் பணியாற்றல் மற்றும் குடியுரிமையை பெற்றுக்கொடுத்தல் (Digital citizenships) , தருக்க சிந்தனை, மற்றும் ஆக்கத்திறன் மற்றும் நிலைபேண்தகு கற்றல் ஆகியவற்றிற்கு மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்கான பொறுப்பு ஆசிரியர்களுக்குரியதாகும். இவ்வகிபங்கினைத் திருப்திகரமாக செய்வதற்கு ஆசிரியர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் தொடர்புபடல் வேண்டும். ஆசிரியர்கள் இந்த வகிபாகத்தை திருப்தியாக ஆற்றுவதற்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய முறைமைகளை போதுமானளவு பயன்படுத்த வேண்டிய தேவை நிலவுகின்றது.

Johnson and McElory (2010) கருத்துப்படி, "கற்பித்தல் கலை என்பது சினேகபூர்வமான ஆளுமையைக் கொண்டிருத்தல் பற்றியதல்ல. ஆனால் மாணவர்கள், பெற்றோர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதோடு, கலைத்திட்டத்தை நிஜ உலகத்துடன் பொருத்தமான வகையில் இணைப்பதும் ஆகும். இவ்வாறு 21 ஆம் நூற்றாண்டின் ஆசிரியர் நாளைய வெற்றியின் பொருட்டு மாணவர்கள், பெற்றோர் மற்றும் சகபாடிகளுடன் தொடர்புகளைப் பேணிப் பாதுகாத்து வருகின்றார்”.

சிங்கப்பூரின் தேசிய கல்வி நிறுவகத்தினால் விருத்திசெய்யப்பட்ட ஆசிரியர் கல்வி மாதிரி, 21 ஆம் நூற்றாண்டில் எதிர்பார்க்கப்படும் ஆசிரியர்களின் வகிபங்கு பற்றிய அகக்காட்சியை (Insight) வழங்குகிறது. சிங்கப்பூரின் ஆசிரியர் கல்வி மாதிரி பற்றி மேலதிகமாக வாசிப்பதற்கும், 21 ஆம் நூற்றாண்டுக்கான ஆசிரியர் வகிபாகங்கள் தொடர்பாக இனங்காணவும் கீழ்வருவனவற்றைப் பார்க்கவும்.


கல்வி உளவியல்   - Click Here

எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்


Post a Comment

0 Comments